திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கொழுமம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தின் முன்புற கட்டட மேற்கூரை இன்று காலை 08.00 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி பேருந்துக்காக சமுதாய நலக்கூடத்தில் காத்திருந்த 3 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கொழுமம் கிராமம், கொழுமம் - பழனி முதன்மைச் சாலையிலுள்ள சாவடியின் முகப்பு மேற்கூரை இன்று (16-10-2023) காலை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததில் மன்மதன் என்பவரது மகன் முரளி ராஜா (வயது 35), சின்னதேவன் என்பவரது மகன் கௌதம் (வயது 29) மற்றும் பாபு என்பவரது மகன் மணிகண்டன் (வயது 28) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து, அவர்களை உடுமலைப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த மூவரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.