Skip to main content

“சாதி வெறி பிடித்தவர்களுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு” - முத்தரசன் 

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

Communist Party of India State Secretary Mutharasan statement on the Gokulraj case

 

“சாதிவெறி பிடித்து, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த வெறி பிடித்து அலையும் பிற்போக்கு சக்திகளுக்குக் கடிவாளம் போட்டு, கட்டுப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.” என கோகுல்ராஜ் ஆணவக் கொலை சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23) கடந்த 2015 ஜூன் 24 ஆம் தேதி சாதிவெறி, ஆதிக்க சக்திகளால் கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுத் தளத்தில் வாதப் பிரதிவாதங்களை  உருவாக்கியது. கோகுல்ராஜ் உடன் பயின்ற மாணவியிடம் நேசமுடன் பழகியதை சகித்துக் கொள்ள முடியாத சாதி வெறிக் கும்பல் ஆணவப்படுகொலையை அரங்கேற்றி, சமூகத்தை அச்சுறுத்தி, ஆதிக்கம் செலுத்த முனைந்தது. கோகுல்ராஜ் ஆவணக் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வரலாறு காணாத கடும் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. கோகுல்ராஜ் மரணத்துக்கு காரணமான சுவாதி பிறழ் சாட்சியானதும், உயர் நீதிமன்றம் சட்ட நெறிமுறைகளில் நின்று வழங்கப்படும் நீதியை விட மேலானது சமூகத்தில் எதுவும் இல்லை, மனசாட்சிக்கு எதிராகப் பேசுவது கூடாது  என்று எடுத்துக் கூறியும், அவர் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்கத் துணிந்தார் என்பது சமூகத்தில் நிலவி வரும் சாதி வெறியர்களின் ஆதிக்கத்தை துல்லியமாக வெளிப்படுத்தும் செய்தியாகும். 

 

இந்த நிலையில் கோகுல்ராஜ் ஆணவக் கொலைக் குற்றத்தில் முதல் குற்றவாளியான யுவராஜ் உட்பட குற்றவாளிகள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு நேற்று (02.06.2023) குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், மதுரை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதில் பிழை காண முடியாது என உறுதி செய்து, குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் உறுதி செய்து சென்னை  உயர் நீதிமன்றம் நேற்று (02.06.2013) உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் ஊடகங்களைப் பயன்படுத்த முயற்சித்தமைக்கு இரையாகாமல் ஊடகங்கள் நீதியை நிலைநாட்ட, உதவியது அதன் முதிர்ச்சியைக் காட்டுவதாகச் சுட்டிக் காட்டியுள்ளது. 

 

சாதிவெறி பிடித்து, சமூகத்தில்  ஆதிக்கம் செலுத்த வெறி பிடித்து அலையும் பிற்போக்கு சக்திகளுக்குக் கடிவாளம் போட்டு, கட்டுப்படுத்தும் வகையில் சென்னை  உயர்நீதி மன்றத்தின வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.  இந்த வழக்கில் ஆரம்பம் முதல் இறுதி வரை விழிப்போடு கண்காணித்து வாதடி, நீதியை நிலைநாட்ட உதவிய மூத்த வழக்கறிஞர்கள் ப.பா. மோகன், சங்கரசுப்பு உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.