போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத் துறையினருக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை, போக்குவரத்துத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் அரசு சார்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் நடைபெற்று வந்தது.
அதன்படி நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது தமிழக அரசு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த குழுவில் நிதித்துறையின் கூடுதல் செயலாளர், தமிழக போக்குவரத்து கழகங்களின் 8 மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட 14 பேர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ளார்.