கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு தொழில்முனைவோர்களுக்கு வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார். நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியின் போது கடன் ஆணைகளை வழங்கி மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது தொழில் முனைவோர் சதீஷ் என்பவர் செய்தியாளர்களிடம், “சிறு, குறு தொழில்முனைவோருக்கு உத்தரவாதம் இன்றி கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததது. இருப்பினும் தனக்குக் கடன் மறுக்கப்படுகிறது. இது குறித்து நான் பிரதமர் அலுவலகத்திற்கும் புகார் அளித்துள்ளேன். அரசு கடன் உதவி உறுதியாக வழங்கப்படும் என அறிவித்த நிலையில் ஏன் எனக்கு கடன் தரவில்லை என கேட்க வந்தேன்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து நிர்மலா சீதாராமன், “லோன் கொடுக்கிறோம் என்பதை காட்டுவதற்காக 10 பேருக்கு லோன் கொடுக்குறாங்க எனச் சொல்கிறார்கள். ஜனநாயகத்தின் தூணாக உள்ள மீடியா, அவரிடம் பேட்டி எடுத்து நல்ல வேலை செய்திருக்கிறார்கள். நண்பரே மேடைக்கு வாங்க. மோடி ஆட்சியில் எல்லோரின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம். உங்களுக்கு ஏன் லோன் கிடைக்கவில்லை என்பதை மேடையில் வந்து சொல்லுங்கள்” என தொழில் முனைவோர் சதீஷை அழைத்தார்.
இதையடுத்து மேடையில் ஏறி சதீஷ் பேசுகையில், “முதலில் கடன் வழங்க ஒப்புதல் அளித்தார்கள். ஆனால் அதன் பிறகு வரவில்லை.40 லட்ச ரூபாய்க்கான கடனுக்கான உத்தரவாதத்தை வழங்கத் தயார் என்று கூறிய பிறகும் தனக்கு கடன் கிடைக்கவில்லை” என தெரிவித்தார். அப்போது நிர்மலா சீதாராமன், “இது பற்றி சம்பந்தப்பட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.