சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.முரளீதரை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி அண்மையில் ஓய்வுப் பெற்றார். இதையடுத்து, அவரது இடத்திற்கு நீதிபதி எஸ்.முரளீதரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதி எஸ்.முரளீதர் தற்போது ஒடிஷா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த எஸ்.முரளீதர், பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்பையும், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் முடித்தார். சென்னையில் வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கிய எஸ்.முரளீதர், 1987- ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டவர்கள், நர்மதா அணைக்கட்டுக்காக வாழ்விடத்தை இழந்தவர்களுக்காக பொதுநல வழக்குகளை எஸ்.முரளீதர் நடத்தியுள்ளார். கடந்த 2006- ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான எஸ்.முரளீதர், பின்னர் ஹரியானா, பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி தற்போது ஒடிஷா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருகிறார்.