இந்தியா முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக தினசரி 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இன்று (20/4/2021) இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த முதல் நாளான இன்று இரவு 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி பேருந்து நிலையம் உள்பட நகர் பகுதியில் ஆய்வு செய்தார். இவருடன் புதுக்கோட்டை கோட்டாட்சியர் டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வில் கலந்து கொண்டனர்.
பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபோது காரைக்குடியைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட ஒரு குடும்பத்தினர் திருவாரூர் கோயிலுக்குச் சென்று சொந்த ஊருக்குச் செல்ல புதுக்கோட்டை வரை வந்திருந்த நிலையில், திரும்பச் செல்ல பஸ் இல்லாமல் தவித்துக் கொண்டு நின்றனர். அதேபோல கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் (இதிலும் ஒரு பெண்) வடமாநிலத் தொழிலாளர்கள் என சுமார் 20 பேர் பேருந்து நிலையத்தில் பஸ் இல்லாமல் தவிப்பதைப் பார்த்து அருகில் நின்ற நகராட்சி ஆணையர் ஜீவசுப்பிரமணியனிடம் கூறி இவர்கள் இரவில் தங்க விடுதி ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.
உடனே 20 பேரும் நகராட்சியில் தங்கி காலையில் ஊருக்குப் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி செய்தியாளர்களிடம் பேசும் போது.. பேருந்து நிலையத்தில் தவித்த பெண்கள் உள்பட அனைத்துப் பயணிகளையும் இரவில் தங்க நகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இது போல பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் தவிக்கக் கூடாது என்பதற்காக பேருந்து நிலையங்களில் பேருந்துகள் செல்லும் வழித்தடம் மற்றும் கால அட்டவணை (அரசு மற்றும் தனியார்) பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பத்திரிகை ஊடகங்கள் மூலமாகவும் தெரிவிக்கப்படும் என்றார்.
டாஸ்மாக் கடைகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. முகக் கவசம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. சமூக இடைவெளிக்கான கோடுகளும் போடப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது'' என்றார்.