விழுப்புரம் வட்டம் கல்பட்டு, வடவாம்பலம் ஆனங்கூர், பள்ளி நெடியனூர் ஆகிய ஊர்களில் பணி செய்து வந்த கிராம நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த நிலையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் கோட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர்களை திடீர் எனப் பணியிட மாறுதல் செய்ததைக் கண்டித்தும் அதை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த ஐந்தாம் தேதி விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் 6 மற்றும் 7 ஆம் தேதிகள் எனத் தொடர்ந்தது. போராட்டத்திற்கு ஆதரவாக கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆதரவளித்து அவர்களும் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றனர். மூன்று நாட்களாகப் போராட்டத்தை தொடர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், நேற்று மாலை கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்றனர். பிறகு ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அவர்களைத் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். சங்கப் பிரதிநிதிகளை மாலை ஆறு மணிக்கு மாவட்ட ஆட்சியர் பழனி அவரது அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரவு எட்டு முப்பது மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டதையடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக இடமாறுதல் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை அதே இடத்தில் மீண்டும் பணி செய்வதற்கு அனுமதித்தும் பணி மாறுதலை நிறுத்தி வைக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று நாட்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.