பெண் மருத்துவர் பற்றிய பதிவுக்கு லைக், கமெண்ட் போட்டவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்ததை அடுத்து திருவண்ணாமலையில் மருத்துவர்களின் 4 நாள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த 6ம் தேதி மதியம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தனது மனைவியுடன் சென்றார். தனது மனைவியை மருத்துவமனைக்குள் அனுப்பிவிட்டு காத்திருந்துள்ளார். சிறிது நேரத்தில் மருத்துவமனைக்குள் சென்ற அந்த பெண் அழுதுகொண்டே வந்து டாக்டர் ரொம்ப திட்டுறாங்க என கூறினார். அதை கேட்டு பெண் மருத்துவரிடம் சென்று விஜயகுமார் கேட்டபோது, உங்கள் மனைவிக்கு கருக்கலைப்பு செய்ய முடியாது. குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்கிறேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும் என கூறியுள்ளார். இதனால் பவானி என்கிற பெண் மருத்துவருக்கும் விஜயகுமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. விஜயகுமார் மருத்துவரை தனது செல்போனில் படம் எடுத்துக்கொண்டு வந்தவர் அன்று மாலையே அப்பெண் மருத்துவர் பற்றி தனது முகநூல் பக்கத்தில் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கருத்து பதிவிட்டிருந்தார். இந்த கருத்துக்கு முகநூலில் நூற்றுக்கணக்கானவர்கள் லைக் செய்தும், பலர் ஷேர் செய்திருந்தனர். 40க்கும் அதிகமானவர்கள் கமெண்ட் போட்டிருந்தனர். இதைப்பார்த்த மருத்துவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து காவல்துறை விஜயகுமாரை கடந்த 7ம் தேதி காலை திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைத்த பின்னரும் மருத்துவர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவுக்கு வந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். போராட்டத்தை கைவிட வேண்டும் இல்லையேல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவகல்லூரி டீன் நடராஜ் அறிவித்தார். அதனால் அதையும் மீறி இன்று மாலை வரை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மருத்துவர் பவானி, கடந்த 9ந்தேதி தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் அவரது கணவரும், மருத்துவருமான சூர்யபிரகாஷ், மிக கடுமையான வார்த்தைகளை செய்தியாளர்களை நோக்கி கூறி மிரட்டினார். பெண் மருத்துவர் தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவர்கள் தொடந்து அந்த பதிவுக்கு கமெண்ட் போட்டவர்களையும் கைது செய்ய வேண்டும், லைக் செய்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது சாத்தியமில்லாதது என காவல்துறை தரப்பில் தெரிவித்தும் மருத்துவர்கள் பிடிவாதம் பிடித்தனர். இதனால் இன்று மாலை 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பெண் மருத்துவர் பற்றிய பதிவுக்கு லைக், கமெண்ட் போட்டவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்ததை அடுத்து திருவண்ணாமலையில் மருத்துவர்களின் 4 நாள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.