/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court33222_6.jpg)
கோவை இடிகரை பள்ளிகொண்ட பெருமாள் கோவிலின் இரண்டு புராதனமிக்க தேர்களை கைவிட்டுவிட்டு, புதிய தேர்களைச் செய்யும் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கில், இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், இடிகரையில் அமைந்துள்ள 14- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவில், 150 ஆண்டுகள் பழமையான இரண்டு தேர்கள் பயன்படுத்தபட்டு வந்தன.
கடந்த 2019- ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட அந்தத் தேர்கள் பாழடைந்துவிட்டதாகக் கூறி, அவற்றைக் கைவிடவும், அவற்றிற்கு மாற்றாக புதிய தேர்களைச் செய்வதற்கும், கோவில் செயல் அதிகாரி ஒப்புதலுடன் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் ஆணையர் ஆகியோர் முடிவெடுத்தனர்.
ஆகம விதிகளுக்கு முரணாக இவர்களின் முடிவு இருப்பதாகக் கூறி, பழைய தேர்களைக் கைவிடும் முடிவை ரத்து செய்யக் கோரியும், புதிய தேர்கள் செய்யும் பணிக்கு தடைவிதிக்கக் கோரியும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன்,சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில்,‘அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கைவிடப்பட்ட தேர்களில் உள்ள புராதன சிலைகள், பொருட்கள் திருடப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நல்ல நிலையில் இரு தேர்கள் உள்ள நிலையில், புதிய தேர்கள் செய்வதற்காக, பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. புராதன தேர்களை மாற்றும் முடிவை எடுத்த மூவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய தேர்களை, தொல்லியல்துறையிடம் ஒப்படைத்து, பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றி, அவற்றைக் கொண்டு தேர்த் திருவிழாவை நடத்த வேண்டும்.’எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து இந்துசமய அறநிலையத்துறை, தொல்லியல் ஆய்வு துறை, கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)