கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற மூவர் அதிமுக கவுன்சிலர்கள் ஆவர். இத்தகைய சூழலில்தான் கோவையின் முதல் பெண் மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்படி கல்பனா ஆனந்தகுமார் கோவை மேயராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த மாநகராட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியின் 19ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இது தொடர்பான கடிதத்தை அவர் திமுக தலைமைக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களே கல்பனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இச்சம்பவம் கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.