கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 96 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மூன்று பேர் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு கவுன்சிலரும் உள்ளனர். இதனையடுத்து கோவையின் முதல் பெண் மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி கல்பனா ஆனந்தகுமார் கோவை மேயராக பதவி வகித்து வந்தார். இத்தகைய சூழலில்தான் கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் தனது பதவியைக் கடந்த ஜூலை 3ஆம் தேதி (03.07.2024) ராஜினாமா செய்திருந்தார்.
இதனையடுத்து கோவை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று (06.08.2024) காலை 10.00 மணிக்கு நடைபெற இருந்தது. முன்னதாக அடுத்த மேயர் வேட்பாளர் யார் என்று குறித்து அமைச்சர்கள் சு. முத்துசாமி, கே.என் நேரு ஆகியோர் நேற்று (05.08.2024) கோவை காளப்பட்டி சாலையில் உள்ள அரங்கில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த ரங்கநாயகி என்பவர் அறிவிக்கப்பட்டார். இவர் கோவை மாநகராட்சியின் 29வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.
இந்நிலையில் கோவை மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் ரங்கநாயகியைத் தவிர போட்டியிட யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் ரங்கநாயகி கோவை மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரங்காநாயகி கோவை மாநகராட்சியின் 2வது பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.