கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாளை (16/09/2021) முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்கள் 50% கடைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாரச் சந்தைகளுக்கும் தடை தொடரும்; உழவர் சந்தைகள் 50% கடைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மளிகை, பாலகம், மருந்துக் கடைகளைத் தவிர பிற கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், பேக்கரிகள் ஞாயிற்றுக்கிழமையில் காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவை தனியார் நர்சிங் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களில் 46 மாணவர்களுக்கு கரோனா உறுதியானது. கேரளாவில் இருந்து வந்த நான்கு மாணவர்களுக்கு கரோனா உறுதியான நிலையில் பிற மாணவர்களுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.