திருவண்ணாமலை நகருக்கு அண்ணாமலையாரை தரிசிக்கவும் கிரிவலம் வரவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாட்டுக்குள் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர். வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து சுமார் 40,000 பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். பௌர்ணமி நாட்களில் 5 லட்சம் பக்தர்கள் வருகின்றனர்.
அப்படி வரும் பக்தர்களுக்கு இங்கு போதுமான வசதிகள் இல்லை என்பது ஒரு புறம் இருக்கும் அதே நிலையில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக திருவண்ணாமலையில் உள்ள பெரும்பான்மையான ஹோட்டல்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளன.
கிரிவலப் பாதையில் மற்றும் கோவில் அருகில் உள்ள ஹோட்டல்களில் வழக்கத்தை விட அதிகமான விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உள்ளூர் மக்களுக்கு ஒரு விலை வெளியூரிலிருந்து, வெளிமாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு தனி விலை என சில ஹோட்டல்கள் சாப்பிடும் பொருட்கள் விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.
விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது விதியாக இருந்தாலும் பெரும்பான்மையான ஹோட்டலில் அப்படி ஒரு விலைப்பட்டியலை வைப்பது இல்லை. இதனால்தான் அவர்கள் விருப்பத்திற்கு தகுந்தபோல் விலை வைத்து விற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ளது பிரபலமான நளா ஹோட்டல். சைவம் அசைவம் ஹோட்டலான இங்கு இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு வாடிக்கையாளர் உணவு சாப்பிட்ட போது அவருக்காக கொண்டு வந்து வைக்கப்பட்ட ரசத்தில் கரப்பான் பூச்சி செத்து மிதந்து கொண்டிருந்துள்ளது.
கரப்பான் பூச்சியோடு சமைக்கப்பட்டு அது வெந்து இருப்பதை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். சாப்பிட்ட சாப்பாடு அவருக்கு ஒப்புக் கொள்ளாமல் வாந்தி வந்துள்ளது. இது குறித்து வாடிக்கையாளர் கேட்டபோது, அந்த ஹோட்டலில் பணியாற்றி வருபவர்கள் அந்த வாடிக்கையாளரை மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சியான அவர் அந்த கரப்பான் பூச்சி இருந்த ரசத்தை வீடியோ எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இதை வெளியில் சொன்னீங்கன்னா ஒழிச்சிடுவோம் என அந்த ஹோட்டல் நடத்துபவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. தரமற்ற உணவு வழங்கிய ஹோட்டலை கேள்வி கேட்ட உள்ளூர் வாடிக்கையாளரையே மிரட்டும் ஹோட்டல்கள் தான் திருவண்ணாமலையில் உள்ளன. இவர்கள் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி என்கிறார்கள்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியும், இதுவரை திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வருத்தப்படுகின்றனர் சமூக நல ஆர்வலர்கள். இந்த ஹோட்டல் திமுக பிரமுகர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமானது. இதனால் உணவு பாதுகாப்புத் துறை காவல் துறையினர், இந்த ஹோட்டல் மீது எந்த புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்க பயப்படுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஹோட்டல் மின்வாரியத்திற்கு தெரியாமல் மின்சாரத்தை திருடி பயன்படுத்தியது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டது. இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இந்த ஹோட்டல் இப்போது வாடிக்கையாளர்களை நேரடியாகவே மிரட்டியுள்ளது.
திருவண்ணாமலை நம்பி வரும் பக்தர்களை இப்படி சுரண்டுவது, ஏமாற்றுவது, மிரட்டுவது என்பது தொடர்கதையாக உள்ளது என்கின்றனர் திருவண்ணாமலையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.