வேலூர் மாநகராட்சி காட்பாடியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பசுமை தீர்ப்பாயத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பினர். அதில் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பூங்காக்குள் தொட்டி அமைத்து மாட்டு சாணத்தை பயன்படுத்தி குப்பைகளை எருவாக்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இதனால் மீத்தேன் வாயு அதிகமாக வெளியாகி கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தி அதிகமாகி குடியிருப்புவாசிகளுக்கு பல நோய்களை உருவாக்குகிறது என மாநகராட்சி மீது புகார் தெரிவித்துயிருந்தனர்.

அந்த புகார் மற்றும் வேறு சில புகார்களை விசாரணை நடத்த பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை மண்டல தலைவரும், நீதிபதியுமான ஜோதிமணி வேலூர்க்கு வருகை தந்திருந்தார். அவர் புகார் சொல்லப்பட்ட இடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் சென்று நேரடியாக ஆய்வு செய்து, மக்கள் சொன்ன குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதை அறிந்து, அதனை உடனே மாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஜோதிமணி, காட்பாடி செஞ்சிகிருஷ்ணாபுரம் என்கிற கிராமத்தின் ஏரிக்கரையோறம் சி.எம்.சி மருத்துவமனை, ஆபத்தான சுகாதார சீர்கேடுகளை அதிகளவில் உருவாக்கும் உயிருக்கு ஆபத்தான மருத்துவ கழிவுகளை ( பயோமெடிக்கல் ) கொட்டிவிட்டு சென்றிருந்தது தொடர்பாக புகாரை விசாரித்து அந்த மருத்துவமனைக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்.
இதேபோல் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் பாதுகாப்பற்ற முறையில் பயோமெடிக்கல் கழிவுகளை கொட்டுவதாக புகார் வந்துள்ளது. அதனை விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அரசு மற்றும் தனியார் துறை என யாராக இருந்தாலும் சுகாதார சீர்கேடு மற்றும் மக்களுக்கு ஆபத்தான வேலைகளை செய்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அப்போதுதான் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள், மக்கள் பாதுகாப்புடன் இருக்கப்பார்கள் என்றார்.