சென்னை சைதாப்பேட்டையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.1.2024) அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.20 கி.மீ நீளத்திற்கு கட்டப்படவுள்ள நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் 2022-23 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சென்னை அண்ணா சாலையில், 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும், வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகளை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள இறுதி செய்யப்பட்டது.
மேலும் மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள நேர்பாட்டில் கட்டப்படும் முதல் உயர்மட்ட சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்மட்ட சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்தை 3 முதல் 5 நிமிடத்திலேயே கடந்து செல்லலாம். மேலும் கட்டுமானம் நிறைவடையும்போது சென்னை மாநகரின் மிக நீண்ட பாலமாக இப்பாலம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை துணை மேயர் மு. மகேஷ் குமார், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ், தலைமை பொறியாளர் (சுட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திரு.ஆர்.சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.