உலக தாய்மொழி தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மொழியின் சிறப்பு, அவசியம், பன்மொழி கலாச்சாரம் ஆகியவற்றை போற்றவும், உணர்த்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் உலகத் தாய்மொழி தினமான இன்று (21-02-24) தமிழ் ஆர்வலர்கள் பலரும் அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வாழ்த்து பதிவு பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ்!
"தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?"
எனப் பாவேந்தர் பாடியபடி தாய்த்தமிழ் காக்கும் மரபில் வந்தவர்கள் நாம்.
பெயர்சூட்டலில், மேடைச் சொற்பொழிவுகளில், திரைப்பட உரையாடல்களில், அரசு ஆவணங்களில் என எல்லாத் தளங்களிலும் தமிழினைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று மீட்டு அதன் பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம். அத்தகைய இயக்கத்தின் வழிவந்த நமது அரசின் சார்பில், உலகத் தாய்மொழி நாளான இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட அனைத்து உறுப்பினர்களும் உறுதியேற்றோம்” என்று பதிவிட்டு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.