திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் உலக முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் திண்டுக்கல் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்தியாவில் தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தொழில் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, தொழிலாளர் தேவை, சாலை வசதி, சட்ட ஒழுங்கு, மின்சார வசதி எனப் பல்வேறு உதவிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார். அதுபோல் தமிழ்நாடு முதலமைச்சர் துபாய், அபுதாபி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்கிட முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
அதுபோல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 13 இலட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி, தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது.
தமிழகத்தில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான நீடித்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் வாயிலாக குறு, சிறு தொழில் முதலீடு ரூ.60,000 கோடி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, அனுமதிகள், மானியங்கள், கடனுதவிகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப படித்த இளைஞர்களுக்கு புதிய தொழில் பயிற்சிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தாட்கோ மூலமாக தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. புதிய தொழில்கள் தொடங்கப்படும் மாவட்டங்களில், அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில், 143 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு மானியமாக ரூ.14.23 கோடியும், மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தில் 318 உற்பத்தி, சேவை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு மானியமாக ரூ.7.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 23 நிறுவனங்கள் சார்பில் ரூ.331.33 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
5 பயனாளிகளுக்கு ரூ.59.81 இலட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, இதில் ரூ.19.45 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்கிட தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். இந்த வாய்ப்புகளை தொழில் முனைவோர்கள், தொழில் முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.