CM Stalin explanation for Dy CM post for Udayanidhi 

சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (05.08.2024) ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் கொளத்தூரில் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனையடுத்து ஜி.கே.எம். காலனியில் தொடக்கப்பள்ளி மற்றும் 10 உயர் கோபுர மின் விளக்குகளை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

Advertisment

இதற்கிடையே முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “எந்த அளவு மழை பெய்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அளவில் தயார் நிலையில் உள்ளோம். சென்னையில் எங்கு மழை நீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். எப்பேர்ப்பட்ட மழை வந்தாலும், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.

Advertisment

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், “ இது தொடர்பான கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் பழுக்கவில்லை” எனப் பதிலளித்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் அரசு அலுவலர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.