இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் எனப் பலரும் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. அதோடு நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கும் மறுப்பு தெரிவித்தது. அதே சமயம் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஒரு மையத்தில் நடைபெற்ற தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி பயிற்சி மையத்தின் தலைவர் உட்பட 5 பேரைக் குஜராத் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான ஆங்கில செய்தியைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “நீட் தேர்வு தொடர்பாகச் சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.
பல்லாயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தேர்வு தடுக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு (NTA) மத்திய கல்வி அமைச்சர் ஆதரவு தெரிவித்த போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் தேசிய தேர்வு முகமை வித்தியாசமான முகத்தைக் காட்டுகின்றன. பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் எட்டு வெற்று காசோலைகளை உள்ளடக்கிய பணப் பலன்களுக்காக ஓ.எம்.ஆர். தாள்களைத் தேர்வு கண்காணிப்பாளர்கள் திருத்தியதாகக் குஜராத் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது. பள்ளியின் முதல்வர், இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி, நீட் தேர்வு தொடர்பாக முறையான மாற்றத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மாணவி அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபகரமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு, ஒரே கோரிக்கையாக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டின் சமூக நீதிக் குரலைத் தெளிவாக உரக்க எதிரொலிப்பதற்காக அன்பிற்குரிய அகிலேஷ் யாதவிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.