தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடும் விழா சென்னை கலைவானர் அரங்கில் இன்று (18.08.2024) நடைபெற்றது. இதனையொட்டி சென்னை வருகை தந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து கலைஞர் நினைவிடத்தில் உள்ள ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தை அவர் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்திற்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனையடுத்து கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். ‘தமிழ் வெல்லும்’ என்று கலைஞர் எழுதிய வரிகளுடன் கூடிய அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனைப் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, கலாநிதி விராசாமி, தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன். காரணம் கலைஞரைச் சிறப்புச் செய்யும் வகையில் நாணயம் வெளியிடப்படுகிறது. 'நா-நயம்' மிக்க கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை நாம் கொண்டாடினோம், இதோ இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா. இதுபோன்ற எத்தனையோ சிறப்புகளுக்குத் தகுதியானவர் தான் கலைஞர். இது உலகம் இன்று ஒப்புக் கொண்ட உண்மை.
இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த தலைவர் கலைஞரின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, இந்திய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்திருப்பது மிகமிகப் பொருத்தமானதுதான். எண்பது ஆண்டுக் காலம் பொது வாழ்க்கையில் இயங்கி, அதில் அரை நூற்றாண்டு காலம், தமிழ்நாட்டின் திசையைத் தீர்மானித்த கலைஞருக்கு, இந்தியாவே வருகை தந்து சிறப்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கலைஞர் நிறைவடைந்த நாள்முதல், நாள்தோறும் அவர் புகழைத்தான் போற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டுக் காலமாக அவரது நூற்றாண்டை முன்னிட்டு, அவரது சாதனைகளைச் சொல்லும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி, கலைஞர் தான். அவர் உருவாக்கிய கட்டமைப்புகளைப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாள் போதாது. கடந்த 15 ஆம் தேதியன்று இந்திய நாட்டின் 78ஆவது விடுதலை நாளைக் நாம் கொண்டாடினோம். அன்று நான் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அத்தனை மாநில முதலமைச்சர்களும் கொடியேற்றினார்களே, அதற்கான உரிமையைப் பெற்றுத்தந்தவரும் முதலமைச்சர் கலைஞர்தான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னாரே, ‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்’ என்று அப்படி ஆட்சி நடத்தியவர் கலைஞர். அதனால்தான் இன்று அகில இந்தியாவும் போற்றும் தலைவராகக் கலைஞர் உயர்ந்து நிற்கிறார்.
‘செயல்படுவதும், செயல்பட வைப்பதும்தான் அரசியல்’ என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாக இருந்தவர் கலைஞர். ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக, எப்போதும் சிந்தித்தார். செயல்பட்டார். கடந்த 1971 ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானம், 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி, போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் நிலம், 1999ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியாவிலேயே அதிகத் தொகையை, அன்றைய பிரதமர் வாஜ்பாய்யிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கியவர் கலைஞர். மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த அதேவேளையில் நாட்டின் பாதுகாப்பு என்று வருகிறபோது கை கொடுத்தவர்தான் கலைஞர்” எனப் பேசினார்.