Skip to main content

சீதாராம் யெச்சூரி மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 12/09/2024 | Edited on 12/09/2024
CM MK Stalin obituary for sitaram yechury passes away

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி (வயது 72) வயது முதிர்வு காரணமாக நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நிமோனியா காய்ச்சலுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் இவர் சிகிச்சை பலனின்றி இன்று (12.09.2024) காலமானார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவ மாணவர்களின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கியுள்ளனர். இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரியும், மருத்துவ பேராசிரியருமான ரிமா டாடா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “72 வயதான சீதாராம் யெச்சூரி கடந்த 19ஆம் தேதி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 03:05 மணிக்குக் காலமானார். இதனையடுத்து மருத்துவ மாணவர்களின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அவரது உடலை  அவரது குடும்பத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம் செய்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM MK Stalin obituary for sitaram yechury passes away

இந்நிலையில் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த  வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர்  சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தோழர் சீதாராம் யெச்சூரி அச்சமற்ற தலைவராக இருந்தவர். சிறு வயதிலிருந்தே, மாணவர் தலைவராக இருந்தபோதே தைரியமாக அவசரநிலைக்கு எதிராக நின்றதால், அவரிடம் இருந்து நீதிக்கான அர்ப்பணிப்பு வெளிப்பட்டது.

தொழிலாளர் வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறப்புமிக்க வாழ்க்கையை வடிவமைத்துள்ளார். அவருடன் நான் கொண்டிருந்த நுண்ணறிவான தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வணக்கம், தோழர்” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்