Skip to main content

ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு;  முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
CM MK Stalin obituary for Boy drowned in river incident 

நீலகிரி மாவட்டம் சேரங்கோடு கிராமம் பாலவயல் பகுதியிலுள்ள பொன்னானி ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் நெல்லியாளம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் குணசேகரன் (வயது 18). இவர் நேற்று (20.07.2024) பிற்பகல் 01.30 மணியளவில் சேரங்கோடு கிராமம் பாலவயல் பகுதியிலுள்ள பொன்னானி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்