
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசலில் பெண்கள் கோலமிட்டனர். அந்த வகையில் சென்னை அயப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் கோலமிட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போன்று மதுரவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக வீடுகளின் வாசலில் கோலமிட்டு பொது மக்கள் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.கோலங்களின் அருகே “இந்தியைத் திணிக்காதே... தமிழர்களை வஞ்சிக்காதே... மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே” போன்ற வாசகங்களை எழுதியிருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பான செய்தியைக் குறிப்பிட்டு பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்பத் திராவிடத்தில் இந்தி மொழியே - நீ இட்ட அடி வெட்டப்படும் இந்தி மொழியே துன்பம் கொடுக்கவந்த இந்தி மொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! அன்பின் தமிழிளைஞர் தாய் அளித்திடும் - நல் அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில் உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ? - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்” எனப் பதிவிட்டுள்ளார்.