தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாளுடன் (24/05/2021) முடிவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 19 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார்.
இந்த ஆலோசனையில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பல்வேறு துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல் பிரதீப் கவுர், குகநாதன், ராமசுப்ரமணியன் உள்ளிட்ட 19 மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனையில் தமிழகத்தில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கலாமா? கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் கூறுகின்றன.
மருத்துவ நிபுணர் குழு உடனான ஆலோசனைக்குப் பின் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று மாலையே முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.