Skip to main content

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மதபோதகர்... அதிரடி தீர்ப்பளித்த மகளிர் நீதிமன்றம்!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021
Clergyman involved in sexual harassment ... Women's court ruled in action

 

பாலியல் தொல்லை குறித்து மாணவ - மாணவிகள் அச்சமின்றி தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சி.எஸ்.ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் மத போதகர் எஸ்.ஜெயசீலன், அந்த வளாகத்தில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த 12 வயது மாணவியிடம், இயேசுநாதரின் கதைகளை கூறுவதாக வீட்டிற்கு அழைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 

 

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம், போதகர் ஜெயசீலனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயசீலன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த  நீதிபதி பி. வேல்முருகன், 12 வயது மாணவியிடம் மத போதகர் ஜெயசீலன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தண்டனையை உறுதி செய்தும், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தார். 

 

போதகர் ஜெயசீலனை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கும்படி சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது, அதுகுறித்து புகார் அளித்தால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் என மாணவிகள் அச்சம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அதனால், அனைத்து பள்ளிகளிலும், சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர், எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத பெண் காவல் அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர், உளவியல் பெண் நிபுணர், அரசு மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டுமென தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், மாவட்ட கல்வி அலுவலர் மாதம் ஒருமுறை பள்ளிகளுக்கு சென்று மாணவிகளின் புகார்களை கேட்டறிய வேண்டுமெனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளர். சுதந்திரமாக புகார் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி,  அதன் சாவியை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் எனவும், வாரந்தோறும்   மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியுடன் சென்று புகார் பெட்டியை ஆய்வு செய்து, புகார்களை ஆய்வு செய்து, முகாந்திரம் இருந்தால், அதன் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல்துறைக்கு அனுப்ப வேண்டுமெனவும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்