நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 100 துப்புரவு பணியாளர்கள் இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை எனத் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தினந்தோறும் குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிப்பதற்காக தற்காலிக துப்புரவுப் பணியாளர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நகராட்சி மூலமாக வழங்க வேண்டிய இரண்டு மாத ஊதியம் வழங்காததால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் கட்ட முடியவில்லை என்று துப்புரவுப் பணியாளர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘தங்கள் குழுவில் ஏராளமான கணவனை இழந்த விதவைகள் உள்ளனர். எங்களுக்கு முழுமையான ஊதியத்தைக் கூட கொடுப்பதில்லை. மற்ற இடங்களில் 12000 ரூபாய் வரை மாத ஊதியம் துப்புரவுப் பணியாளர்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் பெண்களுக்கு 8000 ஆண்களுக்கு 9000 ஊதியம் வழங்குகிறார்கள். குப்பைகளை அள்ளுவதற்கு தேவையான அடிப்படை உபகரணங்கள் கொடுப்பதில்லை. குப்பைகளை அள்ளி எடுத்துச் செல்ல எங்களுக்கு வாகனமும் இல்லை. புதியதாக 12 வாகனங்கள் வந்து ஒரு மாதம் ஆகியும் அதை எங்களிடம் வழங்கவில்லை’ என பல்வேறு கோரிக்கைகளைக் குற்றச்சாட்டுகளாக பதிவு செய்து நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் இரண்டு மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக நகராட்சி ஆணையர் நேரடியாக எங்களிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு கூறும் வரை நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.