Skip to main content

நாகூரில் மீனவர்களுக்குள் மோதல்; சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு! 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

Clash between fishermen in Nagore;

 

நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனைக்கு ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆவேசமடைந்த மற்றொரு தரப்பு மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களைச் சாலையில் கொட்டிப் போராட்டம் நடத்தினர்.

 

நாகை மாவட்டம், நாகூரில் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வது தொடர்பாகப் பிரச்சினை எழுந்துள்ளது. இந்நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று மீன்பிடித்துவிட்டுக் கரை திரும்பிய மேலபட்டினச்சேரி மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மத்தி மீன்களை நாகூர் துறைமுகத்தில் விற்பனை செய்யக்கூடாது என மற்றொரு தரப்பும் மீனவர்கள் தடுத்துள்ளனர். மேலும் அந்த மீன்களை வியாபாரிகள் ஏலம் எடுக்க கூடாது எனவும் கூறியுள்ளனர். 

 

இதனால் ஆவேசமடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள், திடீரென நாகூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் விற்பனை செய்ய முடியாததால் ஆத்திரமடைந்து அவர்கள் பிடித்து வந்த அந்த மீன்களைச் சாலையில் கொட்டி துறைமுகத்தில் மீன் விற்க தங்களுக்கு உரிமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் நாகூர் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.


இதையடுத்து அங்கு வந்த டி.எஸ்.பி சரவணன், நாகூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர், திடீரென டீசலை தலையில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. 


அதனைத் தொடர்ந்து நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குநர் ஜெயராஜ் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததைத் தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். அரசால் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்குச் சம உரிமை வழங்கி மீன்களை எந்த ஒரு பிரச்சனையுமின்றி விற்பனை செய்வதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகூர் மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்