கோப்புப்படம்
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஜவுளிக்கடையில் கடந்த ஒரு வாரமாக விற்பனை களைகட்டியுள்ளது. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளதால் ஜவுளி வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஜவுளி வாங்க பொதுமக்கள் படை எடுப்பதால் கடந்த சில நாட்களாக ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தாலும் வழக்கத்தை விட வாகன எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. ஈரோடு ஆர்கேவி ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதேபோல் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையத்துக்கு செல்வதற்கு பன்னீர்செல்வம் பூங்கா வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் என்பதால் சூரம்பட்டி நால்ரோடு வழியாக வாகன ஓட்டிகள் அதிகமாக சென்று வருகின்றனர்.
இதனால் வழக்கத்துக்கு மாறாக ஈ.வி.என் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் அங்கும் இங்கும் குறுக்காக செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஈரோடு ஜிஎச் ரோட்டில் இருந்து பன்னீர்செல்வம் பூங்காவை கடந்து பேருந்து நிலையம் செல்ல ஏறக்குறைய 30 நிமிடங்கள் கடந்து விடுகிறது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் சிறு சிறு கடைகள் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் போடப்பட்டுள்ளன. இதனால் இட நெருக்கடி மேலும் அதிகரித்து காணப்படுகிறது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு வழியாக செல்லும் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான புதுப்புது கடைகள் முளைத்துள்ளன. இதனால் இந்தப் பகுதியில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர். கூட்ட நெரிசல்களை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், ஜிஹெச் ரவுண்டானா, மணிக்கூண்டு பகுதி உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் சார்பில் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கு போலீசார் பொதுமக்கள் நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இது தவிர போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.