கிறிஸ்தவ மக்களின் முக்கிய வழிபாட்டு நிகழ்வுகளில் ஒன்று புனித வெள்ளி. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இந்த புனித வெள்ளியை முன்னிட்டு, 40 நாட்கள் விரதம் இருந்து கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை ஜெபிக்கும் வகையில், இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவ காலமாக அனுசரித்து வருகின்றனர்.
இதன் தொடக்க நாளாக, சாம்பல் புதன் உள்ளது. இந்த தினம் இன்று (17.02.2021) தொடங்கியது. இதையொட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில், காலை 6 மணிக்கு சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடந்தது. பங்கு தந்தையும் ஈரோடு மாவட்ட முதன்மைக் குருவுமான ஜான் சேவியர் மற்றும் துணைப் பங்கு தந்தை ஜான்சன் பிரதீப் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பாளி நடந்தது. இந்த நிகழ்வின்போது கடந்த ஆண்டு ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குருத்தோலைகள் சேகரிக்கப்பட்டு அவைகள் சுட்டுச் சாம்பலாக வைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன்பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவரின் தலைமீதும் அந்தச் சாம்பல் தூவப்பட்டது. வழக்கமாக சாம்பல் புதன் அன்று ஒவ்வொருவருக்கும் பங்கு தந்தையர்கள் நெற்றிமீது சிலுவை வடிவில், சாம்பல் பூசுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா தாக்கம் காரணமாக, அந்த முறைக்குப் பதிலாக தலையில் சாம்பல் தூவப்பட்டது குறிப்பிடத்தக்கது.