திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொங்காரம்பட்டு கிராமத்தில் வேலூர் - ஆரணி சாலையில், சாலையோரத்தில் ஏரிக்கரை முன்பு பழங்குடி இனத்தைச் சேர்ந்த குறவர் மற்றும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 13 குடும்பத்தினர் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். மூங்கில் கொண்டு கூடை, ஏணி போன்ற கைவினை பொருட்களை உருவாக்கி விற்பனை செய்கின்றனர்.
இவர்களுக்குப் பாதுகாப்பான வீடு இல்லை. மூன்று தலைமுறைகளாக இந்த சாலை ஓரத்திலேயே வசித்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த வாரத்தில் நமது நக்கீரன் இணையத்தில் அம்மக்களின் அவல நிலை குறித்து செய்தி மற்றும் வீடியோ வெளியிட்டிருந்தோம்.
கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் இவர்களின் கூரை வீடுகளில் தண்ணீர் புகுந்து வசிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகம் இவர்களை அழைத்துச் சென்று முகாமில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் சார்பாக நம்மைத் தொடர்பு கொண்ட விஜயா என்ற பெண்மணி, மழை வந்து வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. நாங்கள் சமைக்கப் பொருள் எதுவும் இல்லாமல் உள்ளோம். எங்களுக்கு யார் மூலமாவது ஏதாவது உதவி செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். நமது செய்தியினை பார்த்தது கலங்கிய சமூக சேவகர் சோளிங்கர் என்.ரவி நம்மைத் தொடர்பு கொண்டார். மழையால் அவர்கள் வேலைக்குச் செல்லாததால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் உள்ளார்கள் எனக்குறிப்பிட்டோம்.
அரிசி, மளிகைப்பொருள் தந்து உதவுகிறேன் என முன்வந்தார். நவம்பர் 28 ஆம் தேதி காலை அந்த குடும்பங்களுக்கு, 10 கிலோ அரிசி சிப்பம், பருப்பு, சமையல் எண்ணெய், சோப்பு என தலா 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சமூக சேவகர் சோளிங்கர் என்.ரவி வழங்கினார். தங்களைத் தேடி வந்து உதவி செய்ததற்கு அம்மக்கள் அவருக்கு நன்றியைத் தெரிவித்தனர். தங்களது நிலையை அறிந்து உதவிகள் கிடைக்க வழி செய்த நக்கீரனுக்கும் அம்மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.