Skip to main content

சோழர்காலத்து தங்கவிளக்கை காணவில்லை - பசுபதீஸ்வரர் கோயில் சார்பில் புகார்

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

 

dmdk mariyal

 

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சோழர்காலத்தில் தானமாக வழங்கப்பட்ட தங்க விளக்கை கண்டுபிடிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பந்தநல்லூரைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் புகார் அளித்துள்ளார்.

 

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:  "பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 1931 ம் ஆண்டு தொல்லியல் துறையினர் அந்த கோயிலில் உள்ள கல்வெட்டுகளை படி எடுத்தனர். அதில் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட அணிகலன்கள் குறித்து தகவல்கள் உள்ளது.

 

இதில், பசுபதீஸ்வருக்கு "பொன்னால்" ஆன தங்கவிளக்கு ஒன்று சுமார் 3 கிலோ எடையில் சோழர்காலத்தில் செம்பியன் மாதேவியார் வழங்கியதாக கூறப்படுகிறது.   மேலும், அங்குள்ள ஆதிகேசவ பெருமாளுக்கு தங்க பூனூல் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அந்த பூனூல் தற்போது  பசுபதீஸ்வரர் கோயிலில் பாதுகாப்பகத்தில் உள்ளது.

பெருமாள் மற்றும் சிவனுக்கு பல்வேறு அணிகலன்கள் தங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு செய்தி மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தொன்மையானதும், கலைநயம் மிக்க பொன் மற்றும் வைர நகைகள்,  அணிகலங்கள், பூஜை பொருட்கள்  ஆகியவைகள் கோயிலின் ஆரம்ப சொத்து பதிவேட்டில் அனைத்தும் உள்ளது.

1951 ஆம் ஆண்டு  இந்து சமய அறநிலைய துறைக்கு கட்டுப்பாட்டில் வந்தபோது அவற்றை கணக்கு பார்த்து தான் அரசு எடுத்ததாக கூறப்படுகிறது.

 

இந்து சமய அறநிலைய துறையினர் 1999 ஆண்டுக்கு பிறகு நகைகள் மற்றும்  விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை  ஆய்வு செய்யவில்லை.

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வழங்கப்பட்ட தங்க விளக்கு தற்போது எங்குள்ளது, அவை திருட்டு போனதா, அல்லது வேறு எங்கும் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டுள்ளதாக என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் " என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வெளிநாட்டில் சோழர் கால சிலை கண்டுபிடிப்பு; போலீசார் தீவிர விசாரணை

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Chola period statue discovered abroad Police are actively investigating

 

தமிழ்நாட்டுக்கு சொந்தமான சோழர் காலத்தை சேர்ந்த கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோக சிலையை சுபாஷ் கபூரிடம் இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு ரூ.5.2 கோடி மதிப்பில் அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் லாட்ச்ஃபோர்டு என்பவர் வாங்கியது அம்பலமாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் எந்த கோயிலில் இருந்து கிருஷ்ணர் சிலை திருடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ், வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள தமிழக கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை தனிப்படை அமைத்து வெளிநாட்டு இணையதளங்களை ஆய்வு செய்து கண்டுபிடிக்க உத்தரவிட்டார். அதன்படி சென்னை சிலைதிருட்டு தடுப்புப்பிரிவு காவல்துறை தலைவர் இரா. தினகரன் தலைமையில், சிலைதிருட்டு தடுப்புப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் இரா. சிவக்குமார் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருச்சி பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மேற்கொண்ட தொடர் முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (பாம்பின் மேல் நடனம் செய்யும் கிருஷ்ணர்) உலோக சிலை வெளிநாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இத்தனிப்படையினர் வெளிநாட்டில் தனியார் கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்களால் நடத்தப்படும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் விசாரணை மேற்கொண்டபோது 2008 ஆம் வருடம் நவம்பர் மாதம் லூயிஸ் நிக்கல்சன் என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட கோல்டு ஆப் தீ காட்ஸ் (Gold of the Gods) என்ற ஒரு கட்டுரையைக் கண்டறிந்தனர். அதில் கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காளிங்கன் எனப்படும் பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ள உலோக சிலையின் புகைப்படத்தை அந்த வலைதளத்தில் கண்டறிந்தனர். பின்னர் பல்வேறு இணையதளங்களில் இச்சிலை குறித்த தகவல்களை தனிப்படையினர் மேலும் சேகரிக்கத் தொடங்கினர். அப்போது இது குறித்த கட்டுரை ஒன்று 27.09.2019 அன்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருத்ததைக் கண்டுபிடித்தனர்.

 

அக்கட்டுரையில் டக்ளஸ் லாட்சிஃபோர்டு என்பவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் அவர் கம்போடியா, இந்தியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் இதர நாடுகளில் உள்ள தொன்மை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் சிலைகளை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதும் அத்துடன் பன்னாட்டு கள்ளச்சந்தையில் விற்பது மற்றும் வாங்குவது போன்ற செயல்களை செய்யக்கூடியவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை செய்தபோது, கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை தற்சமயம் அமெரிக்காவில் உள்ள எச்.எஸ்.ஐ. என்ற அமைப்பின் வசம் இருப்பதையும் தனிப்படையினர் கண்டறிந்தனர். மேலும் தனிப்படையினரின் விசாரணையில் டக்ளஸ் லாட்ச்ஃபோர்டு (2020 ஆம் ஆண்டு இறந்து விட்டார்) இச்சிலையை சுபாஷ் சந்திர கபூரிடமிருந்து 2005 ஆம் ஆண்டு 6.50,000 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பு ரூபாய் 52 கோடி) வாங்கியதும் இதற்கு நான்சி வைனர் என்ற சிலை மதிப்பீட்டாளர் சுபாஷ் சந்திர ஈடிருக்கு இச்சிலை சம்பந்தமான போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கு உதவியதும் தெரிய வந்தது.

 

Chola period statue discovered abroad Police are actively investigating

 

தொடர் விசாரணையில், இந்த உலோக சிலையானது பிற்காலச் சோழர் காலமான 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்பதும் தெரிய வந்துள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இந்த கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணரின் சிலை 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுபாஷ் சந்திர கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் தமிழ்நாட்டிலிருந்து ஏதேனும் ஒரு கோயிலில் இருந்து திருடப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம் என்பது உறுதியாகிறது.

 

எந்த கோவிலிலிருந்து இந்த சிலை திருடப்பட்டது என்பதை அறிய தீவிர புலன் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக காவல் ஆய்வாளர் காவேரியம்மாள் கொடுத்த அறிக்கையின் பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு தலைமையகத்தில் குற்ற எண்.11/2023 ச.பி. 380(2), 411(2), 465, 471 மற்றும் 120(8) இத.சன் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல் விசாரணை மத்திய மண்டல கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபாலமுருகன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினரின் இச்சிறப்பான முயற்சியினை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு, கூடுதல் காவல்துறை இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ் வெகுவாகப் பாராட்டினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

சோழர், பாண்டியர் வரலாற்று ஆவணம்; கோவிலாங்குளம் கோயில்கள் தொல்லியல் சின்னமாகுமா?

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

Kovilangulam temple archaeological symbol Chola and Pandya historical record

 

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சமணர் கோயிலையும், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட பெருமாள் கோயிலையும் தொல்லியல் சின்னமாக பாதுகாத்துப் பராமரிக்க தொல்லியல் ஆய்வு மாணவி வே.சிவரஞ்சனி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Kovilangulam temple archaeological symbol Chola and Pandya historical record
ஆய்வாளர் வே.சிவரஞ்சனி

 

பால்கரையைச் சேர்ந்த ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு வழிகாட்டுதலில், தொல்லியல் இடங்களை நேரில் கள ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார். கோவிலாங்குளத்தில் உள்ள தொல்லியல் தடயங்களை ஆய்வு செய்தபின் மாணவி வே.சிவரஞ்சனி கூறியதாவது, “தற்போது கோவிலாங்குளம் என அழைக்கப்படும் இவ்வூர் வெண்பு வளநாட்டு செங்காட்டிருக்கை கும்பனூரான குணகணாபரண நல்லூர் என கல்வெட்டில் சொல்லப்படுகிறது. 

 

அம்பலப்பசாமி கோயில்;

ஊரின் தெற்கில் கோயில் போன்ற அமைப்பில் கருவறையும், அர்த்தமண்டபமும் உள்ள பெரிய மேடை போன்ற இடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிற்பங்கள் உள்ளன. இதில், தெற்கில் 24-ம் தீர்த்தங்கரர் மகாவீரரும், வடக்கில் முக்குடைகளின் கீழ் ஒரு தீர்த்தங்கரரும், நடுவில் சுருள்முடியுடன் ஒரு தீர்த்தங்கரரும் உள்ளனர். இதை அம்பலப்பசாமி கோயில் என்கிறார்கள். 

 

Kovilangulam temple archaeological symbol Chola and Pandya historical record

 

இங்கு கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கச் சோழனது 3 கல்வெட்டுகள் உள்ளன. இதில் ஒன்று முக்குடையோரான ஜைனர்களுக்கு ‘திருமண்டபம், செம்பொன் திவ்ய விமானம் செய்து திருக்கோயில் அமைத்ததாக’ சொல்கிறது. இதன் பராமரிப்புக்காக நிலங்களும், கிணறும், நறுந்தண்ணீர் பந்தலும் அமைத்துக் கொடுத்துள்ளனர். மற்ற இரு கல்வெட்டுகளில் சில ஊர்ப் பெயர்களும், அதிகாரிகள் பெயர்களும் வருணனையுடன் வருகிறது. இது கி.பி. 12 ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கத்தை அறிய உதவுகிறது. இவ்வூருக்கு அருகில் புல்லூர், தொப்பலாக்கரை, குறண்டி ஆகிய ஊர்களில் சமணப்பள்ளி இருந்துள்ளது. ஆனால் இங்கு பள்ளி என்ற சொல்லே கல்வெட்டில் வராததும் திருக்கோயில் என அழைக்கப்பட்டுள்ளதும் ஆச்சரியமாக உள்ளது. 

 

எங்கும் அழகிய பெருமாள் கோயில்;

 

Kovilangulam temple archaeological symbol Chola and Pandya historical record

 

இங்குள்ள எங்கும் அழகிய பெருமாள் கோயிலில் 4 கல்வெட்டுகள் உள்ளன. இதில், மூன்று குலசேகர பாண்டியனுடையது. வரமண்ண வீரர் குறி நம்பிள்ளை, நாரணன், சாணாடனான கன்னி நாட்டரையன் ஆகியோர் இவ்வூர் கோயிலுக்கு கொடையாக பசு, நூறு குழி நிலம் வழங்கியதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயில் விமானம் பிரஸ்தரம் வரை கருங்கற்களாலும், அதன் மேல்பகுதி சுதை மற்றும் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. ஸ்தூபி சேதமடைந்துள்ளது. 

 

பாதுகாக்க வேண்டும்;

பல நூறு ஆண்டு வரலாறு கொண்ட இக்கோயில், புல் பூண்டு முளைத்து ஆங்காங்கே கற்களெல்லாம் இடிந்து விழுந்த நிலையில் காட்சியளிக்கிறது. கருவறையும் அர்த்தமண்டபமும்தான் சேதமடைந்த நிலையில் மிஞ்சியுள்ளது. மகாமண்டபத்தில் அடித்தளத்தை மட்டுமே காணமுடிகிறது. சிற்பங்களோடு உள்ள தூண்கள் கோயிலருகில் உடைந்து கிடக்கின்றன. கோயில் கிணறு குப்பை போடும் இடமாக உள்ளது.

 

சோழ, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டு ஆதாரத்துடன் நீண்டதொரு வரலாற்றையும் தனக்குள் கொண்டுள்ள, கோவிலாங்குளத்தின் சமண, வைணவக் கோயில்களை தொல்லியல் துறையினர் புணரமைத்து, தொல்லியல் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.