
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ளபொண்ணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன். இவரது மகள் கனிஷ்கா (8), மகன் லத்தீஷ் (5). அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகள் ரக்சயா (7), இவரது தம்பி தர்ஷன் (5). இவர்கள் நால்வரும் நண்பர்கள். நேற்று (16.04.2021) மாலை 5 மணி அளவில் அதே பகுதியில் உள்ள புளியங்கொட்டை என்ற குளத்தில் ஆர்வமிகுதியால் இறங்கி குதித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். சிறு பிள்ளைகள் என்பதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்து கத்தி சத்தம் போட்டுள்ளனர்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த இளைஞர்கள் விரைந்து சென்று அந்தக் குட்டையில் குதித்து சிறுவர்களை மீட்பதற்கு தேடினார்கள். அதில் சிறுவன் தர்ஷன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டான், மற்ற 3 குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல், இறந்த நிலையில் குளத்தில் இருந்து மீட்டுள்ளனர்.இந்தத் தகவல் ஊர் முழுவதும் பரவியது. ஊர் மக்கள் திரண்டு சென்று குளக்கரையில் குவிந்தனர். குளத்திலிருந்து சிறுவர்களின் உடலைக் கரைக்கு கொண்டு வந்ததும் அவர்களது உடல்களைப் பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும், ஊர் மக்களும் கதறி அழுதனர்.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் விரைந்து சென்று சிறுவர்களது உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தகவல் அறிந்த திமுக மாவட்டச் செயலாளரும், விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளருமான புகழேந்தி மருத்துவமனைக்குச் சென்று, இறந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பிள்ளைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் விக்ரவாண்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள வாலிஷ்பேட்டை என்ற பகுதியில், இதேபோன்று இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது மூன்று குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இப்படி தண்ணீரில் மூழ்கி இறக்கும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என தினசரி துயரச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)