சென்னை அம்பத்தூரில் காணாமல் போன 'லாக்டவுன்' எனப் பெயரிடப்பட்ட குழந்தை இரண்டு நாட்களுக்கு பிறகு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டது.
அம்பத்தூர் காந்தி நகரில் கட்டடப்பணியில் ஈடுபட்டு வந்த ஒடிஷாவைச் சேர்ந்த தம்பதியின் 'லாக்டவுன்' என்ற பெயர் கொண்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனது. இது குறித்த புகாரில் சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து விசாரணை நடத்திய போதும், குழந்தை குறித்து காவல்துறையினருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் அரசுப் பேருந்தில் குழந்தை ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட பேருந்து நடத்துநர் குழந்தையை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த குழந்தைதான் தேடப்படும் 'லாக்டவுன்' என்பது தெரிய வந்தது.
குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு குழந்தை எப்படி சென்றது, கடத்தியவர்கள் விட்டு சென்றனரா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.