/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shiv-das-meena-file.jpg)
தமிழகம் முழுவதும் சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சேதமடைந்துள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் இதர கட்டுமானங்கள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக, சேதமடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் இதர கட்டுமானங்களை கண்டறிவது என்பது மிகவும் அவசியமாகிறது.
எனவே சேதமடைந்துள்ள பொதுக் கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள். விடுதிகள், பேருந்து நிலையங்கள், அலுவலக கட்டடங்கள் மற்றும் இதர முக்கிய உட்கட்டமைப்புகளான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், பாலங்கள் ஆகியவை குறித்து ஒரு ஒருங்கிணைந்த மதிப்பீடு மற்றும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி பின்வரும் இனங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சேதமடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களைக் கண்டறிந்து தொடர்புடைய துறைகள் மற்றும் முகமைகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து பொது மற்றும் அரசு கட்டடங்கள் மற்றும் இதர உட்கட்டமைப்புகளை முழுமையாகக் கணக்கெடுப்பு செய்ய வேண்டியும், அவற்றில் சேதமடைந்துள்ள அல்லது சிதிலமடையும் தருவாயில் உள்ளவற்றைஉறுதி செய்து மேல் நடவடிக்கைக்காக அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் கட்டமைப்பு உறுதியாக உள்ளதா அல்லது சேதம் மற்றும் சிதிலம் அடைந்துள்ளதா என்பதை மதிப்பீடு செய்து அதன் உறுதித்தன்மைஉறுதியாக இருப்பது கண்டறியப்பட்டால், பழுதுநீக்க நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.
சிதிலமடைந்த கட்டமைப்புகள் மற்றும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள கட்டடங்கள் இருப்பது ஆய்வின்போது தெரிய வந்தால் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களில் உரிய பழுதுநீக்கப் பணிகள் அல்லது மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை சேதமடைந்த கட்டடங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதை தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும் முக்கியத்துவம் வாய்ந்த பொது இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், மருத்துவமனைகள், ஆரம்ப நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இதர முக்கிய கட்டமைப்புகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, வருகிற 30 ஆம் தேதிக்குள் (30.09.2023) பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து பொதுமக்களின் நலன் பேணப்பட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டுள்ள கட்டடங்களில் பழுதுநீக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட கட்டடங்கள் மற்றும் சிதிலமடைந்து இடிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியவை குறித்து ஒரு விரிவான மற்றும் முழுமையான அறிக்கையினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்திட வேண்டும். எனவே, பொது மக்களின் பாதுகாப்பு நலனை உறுதி செய்வது நமது தலையாய கடமையாக கருதி சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு இந்நடவடிவக்கைகள் தொடர்பான அறிக்கையை அரசினுடைய மேலான கவனத்திற்கு கொண்டு செல்வதையும் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)