முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள், இன்று (04-10-24) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. இன்று தொடங்கி அக்டோபர் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் நடப்பாண்டு புதிய ஆட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பொற்கால ஆட்சியை தி.மு.க அரசு வழங்கி வருகிறது. நடப்பாண்டில், 11.53 லட்சம் வீரர்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் பங்கேற்றுள்ளனர்” என்று பேசினார்.
மாநிலம் முழுவதில் இருந்தும் 11.5 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த விளையாட்டு போட்டிகள், சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது. தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், கபடி, சிலம்பம், பளு தூக்குதல், கால்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை, நீச்சல், கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கேரம், வாள்வீச்சு, ஜிம்னாஸ்டிக்ஸ், செஸ் உள்பட 25 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகையான பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். கடந்த ஆண்டு 15 வகையான போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 25 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.