தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று (13/12/2021) தனது குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். அப்போது அவரை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இ.ஆ.ப., ஸ்ரீரங்கம் கோயிலின் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் தெலங்கானா முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோயில் யானை ஆண்டாளுக்கு பழங்களைக் கொடுத்த சந்திரசேகர ராவ், பின்னர் ரங்கநாதரைத் தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா மாநில முதலமைச்சர், சென்னையில் நாளை (14/12/2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கும், சந்திரசேகர ராவ் அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
தேசிய அளவில் பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை அமைப்பது தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.