இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாதம்தோறும் மாணவர்களுக்கு ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தது.
மேலும், கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் தொடங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தை கோவை அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி வைக்கிறார். தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையவுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், மாணவர்களுக்காக ‘தமிழ் புதல்வன்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி கோவை மாநகரில் உள்ள பீளமேடு, ரேஸ்கோர்ஸ், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உக்கட, அவிநாசி சாலை, திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.