அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா. இவருக்கு பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்பு காரணமாக நவ. 8-ம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நேற்று முன்தினம் (15.11.2022) காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார்.
பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன் வந்து மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு செய்து பிரியா உயிரிழந்தது தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். வியாசர்பாடியில் இருக்கும் பிரியாவின் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா.சுப்ரமணியன், மேயர் பிரியா ஆகியோர் உடன் சென்றனர். தமிழக அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கப்படும் என ஏற்கனவே உறுதியளித்திருந்தனர். அதன்படி 10 லட்ச ரூபாய்க்கான ஆணையையும், அக்குடும்பத்தினர் வசிப்பதற்குரிய வீட்டிற்கான ஆணையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும், நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு! அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது” எனக் கூறியுள்ளார்.