Skip to main content

“ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது” - முதல்வர் ஸ்டாலின் 

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Chief Minister special award to Aai Ammal for her contribution to education

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் தனியார் வங்கியில் அலுவலகப் பணியாளராகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 1991 ஆம் ஆண்டு காலமானார். அதன் பிறகு, பூரணம் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரது மகள் கெடுவாய்ப்பாக உயிரிழந்தார். 

இதையடுத்து, தனது மகளின் நினைவாக கொடிக்குளம் கிராமத்தில் இருந்த ரூ. 4 கோடி மதிப்பிலான தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை அங்குள்ள நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதற்காகத் தானமாக வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘நல்ல காரியங்களுக்கு நிலத்தை பயன்படுத்த வேண்டும் என்பது எனது மகள் ஜனனியின் ஆசை. அதன்படியே, எனது நிலத்தை பள்ளிக்கு தானமாக கொடுத்துள்ளேன்’ என்று கூறினார். இவரது செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

அந்த வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரசுக்கு தனது நிலத்தை தானமாக வழங்கிய பூரணம் அம்மாளை பாராட்டியுள்ளார். மேலும், அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஜனவரி 29 ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைத்தளப் பதிவில், “கல்விதான் உண்மையான அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள். ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாக மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது” - முதல்வர் ஸ்டாலின் சாடல்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Minister Stalin said bjp Trying to change the Constitution

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது பிறந்தநாளை தமிழக அரசு சமத்துவநாளாக அறிவித்து சாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை!

பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்” எனக் குறிபிட்டுள்ளார்.

Next Story

“எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? காதுகள் பாவமில்லையா..” - முதல்வர் ஸ்டாலின்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Chief Minister Stalin criticized the BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா.. என்று முதல்வர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், “கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு.. இது அப்பட்டமான பொய்க்கணக்கு; இதில் இரண்டு கூறுகள் உள்ளன: 1) ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது. இதன் கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு,  பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே!

2) ஒன்றிய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு. இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா? இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி, ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி, சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.  இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு,  விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது! தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது ஒன்றிய பாஜக அரசு. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா!” என்று குறிப்பிட்டுள்ளார்.