Chief Minister pays tribute to Avvai Natarajan

தமிழகத்தின் மூத்த தமிழறிஞர்களில் ஒருவரான அவ்வை நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இவர் 1992 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்துள்ளார். மேலும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நெருங்கி நண்பரும் ஆவார்.

Advertisment

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து போன்றோரும் அஞ்சலி செலுத்தினர். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்து, “ஓர் அறிவுச் சுரங்கம் என்று தான் சொல்ல வேண்டும் அவரை. அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபொழுது சொல்லில் மட்டும் வல்லவர் அல்ல, செயலிலும் வல்லவர் என தமிழ் உலகத்திற்கு காட்டியவர். மூன்று முதல்வரோடு இணக்கமாகப் பணியாற்றுவது என்பது தமிழ் படித்த ஒருவனுக்கு அவ்வளவு எளிதல்ல. முதல்வர் மாறுபட்டாலும் தமிழை முன்னிறுத்தி அவர் மொழிக்கு அதிகமாக செய்திருக்கிறார்” எனக் கூறினார்.

Advertisment

அவ்வை நடராஜன் மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “"சிறந்த தமிழறிஞர் ஒளவை நடராசன் (87) வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன்; எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள பெருந்தகை ஔவை நடராசனின் மறைவு தமிழ்த்துறையினர்க்கும், கல்விப்புலத்தார்க்கும் பேரிழப்பாகும்" எனக் கூறியுள்ளார். மேலும் அவ்வை நடராஜனின் தமிழ்ப் பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.