த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 15ஆம் தேதி காலமானார். அவரது மறைவு குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர். அதேபோல் நேரில் சென்றும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று (18/01/2021) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஞானதேசிகன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர் மறைவின்போது எடப்பாடி பழனிசாமி, “ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியவர். பாராளுமன்றத்தில் அவரது கருத்துக்களை ஆழமாகவும் அறிவார்ந்தும் பேசக்கூடியவர். கொள்கை மாறுபாடு கொண்ட கட்சியினருடன் அன்பாக பழகக்கூடிய பண்பாளர்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் அங்கு இருந்தார். அவரையும் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கட்சி ரீதியாக அவரது இழப்பு மற்றும் தனிப்பட்ட நட்பு ரீதியாக அவரது இழப்புக்கு ஆறுதல் தெரிவித்தார்.