தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கடந்த 26 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''''பல பொதுக்கூட்டங்களில் பேசிவருவதால் தொண்டை சரியில்லை. திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் என் உயிரைக் கொடுக்கவும் தயார்'' எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் காங்கேயத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், ''திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்களே தவிர திமுகவை அழிக்க முடியாது. அண்ணா காலம் முதலே திமுகவை அழிக்கப் போகிறோம் என பலர் கூறுகின்றனர். திமுகவை வீழ்த்த உயிரைக் கொடுக்கத் தயார் என தேர்தலுக்கு முன்பே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். திமுவை வீழ்த்த நீங்கள் உயிரை தர வேண்டாம். நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து திமுக ஆட்சியை பார்க்கவேண்டும்'' என்றார்.