தூத்துக்குடி மீளவிட்டான் என்ற இடத்தில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரை தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று (30.12.2024) புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்க பணிகளைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரையில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை ஒட்டி, “அறிவு சிலை (Statue Of Wisdom)” என்ற கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (31-12-24) வெளியிட்டார். முதல்வர் வெளியிட்ட இந்த வெள்ளி விழா மலரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பெற்றுக் கொண்டனர். திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், கன்னியாகுமரியில் உள்ள சாலைக்கு அய்யன் திருவள்ளுவர் சாலை என்று பெயர் சூட்டினார். அதனை தொடர்ந்து அவர், திருவள்ளுவர் பசுமை பூங்காவை திறந்து வைத்து திருவள்ளுவர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காணும் நிகழ்ச்சியான இது என் வாழ்நாளில் சிறந்த நாளாக இருக்கிறது. இந்த சிலையை திறந்த போது கலைஞருக்கு எப்படி இருந்திருக்குமோ அதே உணர்வுதான் எனக்கும் இருக்கிறது. எவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு நமக்கு ஒரு வரலாற்று வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார். இந்த சிலைக்கு வெள்ளி விழா கொண்டாடுவதன் மூலம், கலைஞரின் கனவு நனவான மகிழ்ச்சியாக தற்போது இருக்கிறது. கலைஞர் வழியில், இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் உழைப்பது தான் என்னுடைய வாழ்நாள் கடமை.
ஒரு சிலை அமைத்ததற்கு எதற்கு விழா என சில அதிமேதாவிகள் கேட்டார்கள். அவர்களுடைய கேள்விகளில் அர்த்தம் கிடையாது; ஆனால் உள் அர்த்தம் இருக்கிறது. அவர்களுக்கு பதிலுக்கு பதில் சொல்ல தேவையில்லை. திருவள்ளுவர் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய உலக அடையாளம். திருக்குறள் தமிழ்நாட்டுடைய பண்பாட்டு அடையாளம். அதனால், கொண்டாடுகிறோம், கொண்டாடுவோம், கொண்டாடிக் கொண்டே இருப்போம். சுனாமியை எதிர்த்து உயர்ந்து நின்ற வள்ளுவர் சிலைதான் நம் பண்பாட்டின் குறியீடு. திருக்குறள் சமுத்துவத்தை சொல்வதால், நம் மதம் குறள் மதம்; நம் நெறி குறள் நெறி என தந்தை பெரியார் சொன்னார். குறள் மாநாட்டை நடத்தி திருக்குறளை குறைந்த விலையில் அச்சிட்டு கொடுத்தார். குறள் வகுப்பறையில் மட்டுமல்லாமல் உங்கள் இல்லங்களில், உள்ளங்களில் பரவ வேண்டும் என பேரறிஞர் அண்ணா சொன்னார். கலைஞர், திருக்குறள் தலைவராக வாழ்ந்தார், வலம் வந்தார்.
7 ஆயிரம் டன் எடை கொண்ட வள்ளுவர் சிலையை பாறையில் தூக்கி நிற்கவைத்ததே பெருமை. அறத்துப்பால் அதிகாரங்களை குறிக்கும் வகையில் வள்ளுவர் சிலையின் பீடம் 38 அடியாக இருக்கிறது. மீதமுள்ள 95 அதிகாரங்களை பிரதிபலிக்கும் வகையில் சிலை உயரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை காண்பதற்காக 3 புதிய சுற்றுலா படகுகள் வாங்கப்படும். அந்த படகுகளுக்கு காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யூ.போப் பெயர்கள் சூட்டப்படும். ஆசிரியர்கள் மூலம் மாவட்டந்தோறும் திருக்குறள் பயிலரங்கங்கள் நடத்தப்படும். காவி சாயம் பூச நினைக்கும் எண்ணங்களை வள்ளுவம் விரட்டியடிக்கும்” எனப் பேசினார்.