வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, தமிழக அமைச்சர்கள், துறை அதிகாரிகள், காவல்துறை, தலைமைச் செயலர் உள்ளிட்டோருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30-10-24) சென்னையில் ஆலோசனை நடத்தினார். வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீர் வடிகால் பணிகள், வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து ஏற்கெனவே, உள்ளாட்சித் துறை அமைச்சருடன் 2 முறை கூட்டம் நடந்த நிலையில், இன்று விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “காலநிலை மாற்றத்தால் ஏற்படும் குறைந்த நேரத்தில் அதீத மழையை எதிர்கொள்வது என்பது மிகவும் முக்கியம். கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தை தமிழ்நாடு அரசு திறம்பட எதிர்கொண்டது. அதே போல், இந்த ஆண்டும் பேரிடர்களை தடுக்க நாம் முன்னெச்சரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் நம்மால் பாதிப்புகளை தடுக்க முடியும்.
அந்த வகையில், வானிலை முன்னெச்சரிக்கை உள்ளிட்ட முன்னறிவிப்புகளை அறிந்துகொள்ள தமிழ்நாடு அரசு TN ALERT என்ற செயலி தொடங்கப்படவுள்ளது. மழையின் அளவு, ஏரிகளில் நீர் இருப்பு நிலவரத்தை இந்த செயலி மூலம் மக்கள் அறிய முடியும். வெள்ளம் ஏற்பட்டதும் எவ்வளவு விரைவாக செயல்பட வேண்டுமோ அவ்வளவு விரைவாக செயல்பட வேண்டும். வெள்ளத் தடுப்பு தூர்வாருதல் மின் கம்புகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க வேண்டும். ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்றினால் பேரிடர்களை தடுக்க முடியும். பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.