Skip to main content

மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Chief Minister M.K. Stalin's letter

இலங்கைக் கடற்படையினரால் கடந்த 9 ஆம் தேதி (09.12.2023) தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோல தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (11-12-2023) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,  “IND-TN-06-MM- 7675 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும், IND-PY-PK-MM-1499 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்களும், 9-12-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அதோடு, IND-TN-10-MM-558 என்ற பதிவெண் கொண்ட மற்றொரு மீன்பிடிப் படகு இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது, நமது மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

‘துரித நடவடிக்கை’- முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Urgent Action Thanks to the CM Darumapuram Atheenam
கோப்புப்படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்த சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் போலி ஆபாச வீடியோ விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது மிகத் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், காவல்துறைக்கும் தருமபுரம் ஆதீனம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தருமபுரம் ஆதீனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகத் துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும் எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தருமபுர மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“கீழடி அகழாய்வு பொருட்களைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” - உயர்நீதிமன்றம்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
keezhadi excavation materials should be handed over to the TN govt says High Court 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன. அதன் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் இந்த அகழாய்வு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இருப்பினும் இதுவரை இந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் உள்ளது. அதேபோன்று அகழாய்வின் போது கிடைத்த பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்து வருகிறது.

இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் மதி என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கீழடி அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் பணியமர்த்த வேண்டும். இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கீழடி இரண்டாம் கட்ட அழகாய்வின் போது கிடைத்த 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட பின் மத்திய தொல்லியல் துறையிடம் உள்ள கீழடியின் இரண்டாம் கட்ட அகழாய்வின் போது கிடைத்த 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

முன்னதாக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 26 ஆம் தேதி (26.02.2024) விசாரணைக்கு வந்தது.

keezhadi excavation materials should be handed over to the TN govt says High Court 

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு குறித்த அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்திருந்த உத்தரவில், “கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் பொது வெளியில் வெளியிட வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.