தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்கள் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்தனர்.
பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் புதிய அமைச்சர்களுக்கும் ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் ஆகியோருடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் தனபாலும் அருகருகே அமர்ந்து தேநீர் அருந்தினர்.
அதைத் தொடர்ந்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு முதலமைச்சர் கண்கலங்கினார். பின்பு, தாயார் தயாளு அம்மாளிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆசிபெற்றார்.
அங்கிருந்து மெரினாவிற்குச் சென்ற மு.க. ஸ்டாலின் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன் தொடர்ச்சியாக, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்குச் சென்ற மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதல்வர் அறைக்குச் சென்ற மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்பு, முதல்வர் இருக்கையில் அமர்ந்து பணிகளைத் தொடங்கிய மு.க. ஸ்டாலின் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
முதலமைச்சர் கையெழுத்திட்ட அந்த ஐந்து கோப்புகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்!
முதலில், ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூபாய் 4,000 வழங்குவதற்கான கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். அதன்படி, முதல் தவணையாக ரூபாய் 2,000 மே மாதத்திலேயே வழங்கப்பட உள்ளது. 2.07 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 4,153.39 கோடி செலவில் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.
அடுத்ததாக, மே 16ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 குறைக்கப்படும் கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.
தமிழகத்தில் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணிக்கும் கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். அதன்படி, அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமின்றி நாளை (08/05/2021) முதல் பயணம் செய்யலாம்.
தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் கோப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசே ஏற்க உள்ளது.
மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறையை உருவாக்குவதற்கு வகை செய்யும் கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.
இதனிடையே, முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.