Skip to main content

"சாதனை என்று சொல்வதைவிட வேளாண் புரட்சி என்றே சொல்லலாம்" - முதல்வர் பெருமிதம்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

chief minister mk stalin says achievement we can call it an agricultural revolution

 

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது. மேலும், முதல்வர் ஸ்டாலின் அதை திறந்து வைக்கவுள்ளார். மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரைக்கும் செல்லும் வகையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை முதல்வர் தஞ்சாவூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், "திமுக ஆட்சி அமைந்த உடன் வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியின்படி ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டு வருகிறது. வேளாண் துறைக்கு என்று தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடச்சேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் விடும் அறிக்கையை மத்திய அரசு அறிவித்த உடன் நம்முடைய அரசு அதை எதிர்த்துப் போராடியது. மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று நான் அறிவித்தேன். எனவே மத்திய அரசு ஏல அறிவிப்பை ரத்து செய்தது. டெல்டாவின் உரிமையை விட்டுக் கொடுக்காத அரசாக திமுக அரசு செயல்படும். காவிரி டெல்டா பகுதியில் வேளாண் வளர்ச்சிக்கும், இந்த பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்கள் தூர்வாருவதற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறோம்.

 

காவிரி பாசன பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாருவதற்காக கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் 62 கோடியே 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3859 கி.மீ நீளம் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் நாளான ஜுன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் விளைவாக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் இருந்து வரலாற்று சாதனையை நாம் எட்டினோம். 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13 லட்சத்து 341 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் செய்தோம். அதில் 39 லட்சத்து 73 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தோம். அதை சாதனை என்று சொல்வதைவிட வேளாண் புரட்சி நடந்தது என்றே சொல்லலாம்.

 

அதன் தொடர்ச்சியாக 2022-2023 ஆம் ஆண்டில் வரவு, செலவு திட்டத்தில் காவிரி பாசன பகுதியில் தூர்வாருவதற்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடைமடை வரை தண்ணீர் சென்றடையும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்றது. மேட்டூர் அணை மிகச் சீக்கிரமாக மே மாதம் 24 ஆம் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டது. தண்ணீர் வந்து சேருவதற்கு முன்பே 4964 கி.மீ தூரத்திற்கு கால்வாய்கள் அனைத்தும் முழுமையாக தூர்வாரப்பட்டது. உழவர்களுக்கான இடுபொருட்கள், கூட்டுறவு கடன்கள் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. 2021-2022 ஆம் ஆண்டு சாதனையை முறியடிக்கும் வகையில், 2022-2023 ஆம் ஆண்டில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி, 13 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் செய்யப்பட்டது. இதன்மூலம் 41 லட்சத்து 45 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.

 

chief minister mk stalin says achievement we can call it an agricultural revolution

 

இந்தாண்டும் வேளாண் புரட்சி தொடர்ச்சியாக நடைபெற்றது. அதன்படி இந்தாண்டின் திட்டமிடல் செய்யப்பட்டு நீர்வளத்துறை மூலமாக தூர்வாரும் பணிகளை செய்வதற்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 4773 கி.மீ நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரும் பணி மேற்கொள்ளபட்டன. 96 சதவீத பணிகள் முடிவடைந்தது. அதேபோல் வேளாண் பொறியியல் துறை மூலம் 5 கோடி செலவில் 1146 கி.மீ தூரத்திற்கு கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 651 கி.மீ தூரமுள்ள பணிகள் முடிவடைந்தது. எஞ்சியுள்ள 45 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்படும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் 27 கோடியே 17 லட்சம் செலவில் 1433 கி.மீ சிறிய கால்வாய்களை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. 8 கோடியே 13 லட்சம் செலவில் 25 வகையான குளம், குட்டைகள் புனரமைக்கப்பட்டு வருகிறது.

 

இந்தாண்டும் மேட்டூர் அணையில் இருந்து 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. நான் மேட்டூர் சென்று டெல்டா பாசனத்திற்காக அணையை திறந்து வைக்க உள்ளேன். எனவே சென்ற ஆண்டுகளில் நாம் சாதித்துக் காட்டியது போலவே மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக டெல்டா பகுதிக்கு வந்து சேருவதற்கு முன்பே அனைத்து தூர்வாரும் பணிகளும் முடிக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளை போல டெல்டாவில் உள்ள விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைப்பார்கள் என நம்புகிறேன். கழக ஆட்சியில் வேளாண் உற்பத்தி அதிகமாகி உள்ளது. பாசன பரப்பு அதிகமாகியிருக்கிறது. இவை அனைத்தும் வேளாண் துறையில் மாபெரும் புரட்சியை காட்டுகிறது. தூர்வாரும் பணியை தொடர்ச்சியாக செய்து மண்ணையும் மக்களையும் காப்போம் என்பதை நான் உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்தார்.

 

chief minister mk stalin says achievement we can call it an agricultural revolution

 

அதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "கர்நாடகாவில் புதிதாக வந்துள்ள காங்கிரஸ் ஆட்சி மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த அரசும் தொடர்ச்சியாக மேகதாது அணை கட்டுவோம் என்று கூறுகிறார்கள். அப்போதும் நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இன்று வரை தமிழக அரசு அதே நிலையில் தான் உள்ளது. எனவே எந்த காரணத்தை கொண்டும் கலைஞர் எப்படி உறுதியாக இருந்தாரோ அதே உறுதியோடு இந்த ஆட்சி நிச்சயமாக இருக்கும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்" என்றார்.

 

பயிர் காப்பீடு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், "பயிர் காப்பீடு குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது" என்றார். நேற்று நடைபெற்ற ஆய்வின்போது 100 நாள் பணியாளர்களை சந்தித்தபோது அவர்கள் வைத்த கோரிக்கை குறித்த கேள்விக்கு, "அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம் முறையாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். அது முறையாக கொடுக்கப்பட்டு வருகிறது என்றும், எங்கெல்லாம் புகார்கள் இருக்கிறதோ அதை ஆய்வு செய்து களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதி அளித்திருக்கேன்" என்றார். பத்திரிகையாளர்களுக்கான மானிய விலையிலான பட்டா நிலம் வாங்கியது தொடர்பான கேள்விக்கு, "இப்பிரச்சினை குறித்து மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது" என்றார். ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்ந்து பல பின்னடைவுகளை தமிழகத்திற்கு கொண்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் தமிழக அரசு என்ன செய்யும் என்ற கேள்விக்கு, "நாங்களும் நீதிமன்றத்தை நாடி இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

 

ஆளுநரை மாற்றுவது குறித்த கோரிக்கை முன்வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, "நாங்கள் நினைப்பது எல்லாம் நடந்தால் இந்த பிரச்சனையையே இல்லை" என்றார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழகத்திற்கு கலைஞரின் பெயர் சூட்டப்படுமா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக அது பரிசீலிக்கப்படும். ஏற்கனவே இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு பெயர் வைக்கலாமா அல்லது புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு பெயர் வைக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து யோசித்து முடிவு செய்வோம்" என்றார். பல்கலைக்கழகங்களில் பட்டம் கொடுக்கப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது என்ற கேள்விக்கு, “தமிழகத்தைப் பொறுத்தவரை உயர்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியுள்ளார். பல்கலைக்கழகங்களில் மாநில முதல்வர்கள் வேந்தர்களாக இருக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

 

chief minister mk stalin says achievement we can call it an agricultural revolution

 

தமிழக அமைச்சரவையில் மாற்றம் உள்ளதா என்ற கேள்விக்கு, "இன்றைக்கு வந்திருக்கும் செய்திகள் மத்திய அரசில் தான் அமைச்சரவை மாற்றம் ஏற்படுவதாக உள்ளது. தமிழகத்தில் தொழில் மற்றும் வணிகம் சார்ந்தவற்றில் மின் கட்டணம் உயர்வு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு பத்திரிகை மட்டும் தான் அதை திட்டமிட்டுப் பரப்புகிறது. மற்ற பத்திரிகைகள் அவற்றை புரிந்து கொண்டுள்ளது. வீட்டு இணைப்புகளைப் பொறுத்தவரை மின் கட்டணம் உயர்த்தப்படாது. அனைத்து மின்சார இலவச சலுகைகளும் தொடரும். வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள் உள்ளிட்டவற்றிற்கான இலவச மின்சாரம் தொடரும். கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார சலுகைகளும் அப்படியே தொடரும்.

 

மத்திய அரசின் விதிமுறைப்படி 4.7 சதவீத கட்டணம் அதிகரிக்க வேண்டும். ஆனால் 2.18 சதவீதமாக குறைத்து அந்த தொகையையும் மானியமாக தமிழக அரசு ஏற்றுக் கொண்டு மின்வாரியத்திற்கு தருவதற்காக அரசு உத்தரவிட்டுள்ளது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் 13 பைசாவில் இருந்து 21 பைசா வரை உயர்வு இருக்கும். மற்ற மாநிலங்களில் இதைவிட அதிக மின் கட்டணம் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் செங்குத்தாக மின்கட்டணத்தை உயர்த்தினார்கள். மின்வாரியத்தை கடனில் மூழ்கடித்து விட்டு சென்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது அதிமுக ஆட்சி. அதனால் தான் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அமுல் நிறுவனம் தமிழகத்திற்குள் வருவதை நிச்சயம் தமிழக அரசு எதிர்க்கும்.  ஆவின் நிறுவனத்தில் சிறார்கள் பணியாற்றுவது என்பது பொய்யான செய்தி. அந்த துறையின் அமைச்சர் இது குறித்து உரிய விளக்கம் கொடுத்துவிட்டார். அவர்கள் வெளியிட்ட ஆதாரமும் போலியாகத் தயாரிக்கப்பட்டது.

 

வருகின்ற 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் நான் கலந்து கொள்கிறேன். எனவே அந்த கூட்டத்தின் வாயில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கேமராக்கள் இல்லை என்று கூறி 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதற்குரிய விளக்கத்தை அதிகாரிகள் டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் நேரில் சென்று பேசி மீண்டும் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளனர்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.