தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (08.10.2021) கத்திபாரா நகர்ப்புற சதுக்கப் பகுதியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் பன்முகப் போக்குவரத்துகளை ஒருங்கிணைத்து, பயணிகள் ஒரு போக்குவரத்திலிருந்து மற்றொரு போக்குவரத்திற்கு மாறிச் செல்வதற்கும், அப்பகுதியில் காத்திருக்கும்போது பயணிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் ரூ. 14.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல், போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை எதிரில், சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் தெள்ளியகரம் மெட்ரோ நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும், அங்கு அமைக்கப்படும் தரம் உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையக் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.