Skip to main content

பேரறிஞர் அண்ணா - கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Chief Minister mk stalin honors Anna and kalaignar Memorial

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இரவு 9 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 291 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மையான இடங்களில் வெற்றியையும் பதிவு செய்துவிட்டனர்.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தொண்டர்களைச் சந்தித்தப்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த நாடாளுமன்ற  மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்தத் தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதியையும் சேர்த்து 40க்கு 40 வெற்றி பெற வைத்திருக்கிற தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. 

Chief Minister mk stalin honors Anna and kalaignar Memorial

இதுதான் எங்கள் கூட்டணியின் வெற்றி. பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகம், ஊடக பரப்புரை அனைத்தையும் உடைத்தெறிந்து நாம் பெற்றுள்ள மகத்தான வெற்றி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக அமைந்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை திமுக இயக்கத்தை 50 ஆண்டுக்காலம் காப்பாற்றிய முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்குக் காணிக்கையாக்குகிறேன். ஆட்சியமைக்கததேவையான இடங்களைப் பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியிலான தாக்குதலை பாஜக தொடுத்தது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. மோடியின் எதிர்ப்பு அலை பல மாநிலங்களில் உள்ளது. அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் முழுமையாக வெளிப்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவீர்களா?’என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என் உயரம் எனக்குத் தெரியும்” எனப் பதிலளித்தார். இதனையடுத்து மநீம தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மலர் மரியாதை தூவி செலுத்தினர். அதே சமயம் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (05.06.2024) காலை 10 மணிக்கு டெல்லி செல்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்