தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் நடக்கவிருக்கும் அரசு நிகழ்ச்சியிலும், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. படத்திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்நிகழ்ச்சிக்களுக்கான ஏற்பாடுகளை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் செய்துவருகின்றனர்.
முதல்வர் கலந்துகொள்ளும் மேடையின் இறுதி வடிவம், இறுதி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “தமிழக வரலாற்றிலேயே 30 ஆயிரத்து 700க்கு மேல் பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா இதுவாகத்தான் இருக்கும். முதலமைச்சர் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். காலை 9 மணிக்கு விமான நிலையத்திலிருந்து நேராக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வரும் முதல்வர், ஒரு மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். அதன்பிறகு மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா படத்திறப்பு விழா நிகழ்வு நடக்க இருக்கிறது. முடிந்தவுடன் விமானத்தில் மூலமாக சென்னை கிளம்பி செல்வார்” என அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் செய்தியாளர்கள் சந்திக்கும்போது, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.